எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 25 ஜனவரி, 2021

இட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள்.

இட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள்.

இட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள்.

1.டாங்கர் சட்னி
2.ஆரஞ்சு துவையல்
3.ரோஜாப்பூ சட்னி
4.வெங்காயக் கோஸ்
5.கதம்பச் சட்னி
6.கத்திரி உருளை அவியல்
7.வரமிளகாய்த் துவையல்

இட்லி தோசைக்குத் தொட்டுக் கொள்ள ஏழு விதச் சட்னிகள்.

1.டாங்கர் சட்னி:-


தேவையானவை :-

சின்ன வெங்காயம் – 20, வெள்ளைப் பூண்டு – 15, வரமிளகாய் – 6, புளி – ஒரு நெல்லிக்காய் அளவு, உப்பு – அரை டீஸ்பூன், மிளகாய்த் தூள் – கால் டீஸ்பூன், வெல்லம்/சர்க்கரை – கால் டீஸ்பூன், எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன்.

செய்முறை :-
சின்ன வெங்காயம் வெள்ளைப்பூண்டைத் தோலுரித்து நைசாக வட்டமாக அரியவும். வரமிளகாயை விதையில்லாமல் சின்னதாக ஒடித்துக் கொள்ளவும். ஒரு பானில் எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும் வரமிளகாயைப் போடவும். லேசாக சிவந்து வாசம் வந்ததும் சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டைப் போட்டு நன்கு வதக்கவும். உப்பு புளியை அரை கப் தண்ணீரில் கெட்டியாகக் கரைத்து ஊற்றவும். மிளகாய்ப் பொடியையும் போட்டு நன்கு கொதித்துச் சுண்டி எண்ணெய் பிரியும் போது வெல்லமோ சர்க்கரையோ போட்டு இறக்கவும்.

2.ஆரஞ்சு துவையல்:-

தேவையானவை :-

வரமிளகாய் – 6, தேங்காய் – 1 மூடி, புளி – 1 சுளை, சின்ன வெங்காயம் – 6. உப்பு – கால் டீஸ்பூன்

செய்முறை :-

தேங்காயைத் துருவி அனைத்தையும் போட்டு மிக்ஸியில் சிறிது நீர் விட்டு அரைத்து எடுக்கவும். இது ஆரஞ்ச் கலரில் இருப்பதால் இதற்கு இந்தப் பெயர். இட்லி, தோசை, சாதம் ஆகியவற்றுக்கும் இது பொருத்தமாக இருக்கும்.

3.ரோஜாப்பூ சட்னி :-

தேவையானவை :-

மிளகாய் – 30, சின்ன வெங்காயம் – 10, உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன்.

செய்முறை :- வரமிளகாயுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் அல்லது அம்மியில் விழுதாக அரைத்து எடுக்கவும். கால் கப் தண்ணீரில் பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்து வைக்கவும். சின்ன வெங்காயத்தை தோலுரித்து வட்ட வட்டமாக நைசாக அரியவும். எண்ணெயைக் காயவைத்து கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து போட்டு சிவந்ததும். நைசாக அரிந்த வெங்காயத்தைப் போட்டு மென்மையாகும் வரை வதக்கவும். அதில் அரைத்த மிளகாய் விழுதைப் போட்டு ஒரு நிமிடத்தில் இறக்கிவிடவும். இதில் சின்ன வெங்காயம் ரோஜா இதழ்கள் போல சிவப்பாக இருப்பது அழகு & ருசி.

4.வெங்காயக் கோஸ்:-

தேவையானவை :-

பெரிய வெங்காயம் – 2, பெரிய தக்காளி – 1, உருளை – சிறியது – 1, தேங்காய் – 1 மூடி, வரமிளகாய் – 10, சோம்பு – அரை டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன், முந்திரி – 4, பட்டை – கால் இன்ச் ( விரும்பினால் ), உப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன். உளுந்து – அரை டீஸ்பூன், கிராம்பு – 1 ( விரும்பினால் ), கருவேப்பிலை – 1 இணுக்கு

செய்முறை :-

பெரியவெங்காயத்தைத் தோலுரித்து தயிர்ப் பச்சடிக்கு நறுக்குவது போல் நீளமாக மெல்லிசாக நறுக்கவும். தக்காளியை துண்டுகள் செய்யவும். உருளையைத் தோலுரித்து வெங்காயம் போல் குச்சி குச்சியாக நறுக்கவும்.

வரமிளகாய், துருவிய தேங்காய், சோம்பு, சீரகம், பொட்டுக்கடலை, முந்திரி (பட்டை ) , உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு விழுதாக அரைத்து எடுக்கவும்.  எண்ணெயைக் காயவைத்து உளுந்து கிராம்பு போட்டுத் தாளித்து வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் தண்ணி தண்ணியாக வதங்கியதும் உருளை, தக்காளியைப் போட்டு வதக்கவும். இரண்டு நிமிடம் கழித்து கருவேப்பிலை சேர்த்து அரைத்த விழுதைப் போட்டுத் திறக்கித் தேவையான தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும். 3 கப் தண்ணீர் சேர்க்கலாம்.

நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும். இட்லிக்குத் தொட்டுக்கொள்ள மிகவும் ருசியான பதார்த்தம் இது.

5.கதம்பச் சட்னி:-

தேவையானவை :-

வரமிளகாய் – 4, பச்சை மிளகாய் – 2, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 1, கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – 1 டீஸ்பூன், கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன், பெருங்காயம் – 1 சிறு துண்டு, வெந்தயம் – கால் டீஸ்பூன், கொழுந்து கருவேப்பிலை – 1 கைப்பிடி, கொத்துமல்லி – 1 கைப்பிடி, புதினா – அரைக் கைப்பிடி, இஞ்சி – ஒரு இன்ச் துண்டு,, பூண்டு – 1 பல், உப்பு – அரை டீஸ்பூன், தேங்காய் துருவியது – 2 டேபிள் ஸ்பூன், புளி – 2 சுளை. எண்ணெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:-

பெரிய வெங்காயத்தைத் தோலுரித்து பொடியாக அரியவும். தக்காளியைத் துண்டுகள் செய்யவும். எண்ணெயைக் காயவைத்துக் கடுகு போட்டு வெடித்ததும் உளுந்து கடலைப்பருப்பு போட்டு சிவந்ததும் பெருங்காயம் வெந்தயம் வரமிளகாய் போட்டு வறுக்கவும். அதில் இரண்டாக நறுக்கிய பச்சை மிளகாய், பெரிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, உப்பு , புளி போட்டு வதக்கவும். கடைசியாக கருவேப்பிலை கொத்துமல்லி புதினா போட்டு லேசாகப் புரட்டி அடுப்பை அணைத்து விடவும்.

ஆறியதும் மிக்ஸியில் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்.

6.கத்திரி உருளை அவியல்:-

தேவையானவை :-

கத்திரிக்காய் – 4. உருளைக்கிழங்கு – 1 ( பெரிது – சின்னமாக இருந்தால் இரண்டு ), தக்காளி – 1 ( பெரிது ), தேங்காய் – 1 மூடி, பச்சைமிளகாய் – 5, சோம்பு – அரை டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், பொட்டுக்கடலை – 1 டேபிள் ஸ்பூன், பாதாம் பருப்பு – 2. கசகசா – கால் டீஸ்பூன். சின்ன வெங்காயம் – 2, பூண்டு – 1 பல், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு.

செய்முறை:-

கத்திரிக்காய், உருளைக்கிழங்கு பெரிய வெக்காயம், தக்காளியை சுத்தம் செய்து சதுரத் துண்டுகளாக்கவும். தேங்காய், பச்சைமிளகாய், சோம்பு சீரகம், பொட்டுக்கடலை, பாதாம் பருப்பு, கசகசா, சின்னவெங்காயம், பூண்டு, உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.

எண்ணெயைக் காயவைத்து வெங்காயம் தக்காளியைப் போட்டு வதக்கவும். வதங்கியவுடன் கருவேப்பிலை போட்டு கத்திரிக்காய், உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் அரைத்த விழுதைப் போட்டுத் திறக்கி 3 கப் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க விடவும்.

உருளைக்கிழங்கு மென்மையாகும் வரை லேசாக மூடி வேகவைத்து இறக்கவும். குருமாவைப் போன்ற சுவை உடையது இது.

7.வரமிளகாய்த் துவையல்:-

தேவையானவை :-

வரமிளகாய் 10. பெரிய வெங்காயம் – 1, சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 1 பல், தக்காளி – 2, பெருங்காயம் – 1 துண்டு, உப்பு – அரை டீஸ்பூன், புளி – 2 சுளை, எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன்,  உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன், கருவேப்பிலை – 1 இணுக்கு.

செய்முறை :_

பெரிய வெங்காயம் சின்னவெங்காயம், பூண்டைத் தோலுரித்து நறுக்கவும், தக்காளியைத் துண்டுகள் செய்யவும். மிக்ஸியில் வரமிளகாய், பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் பூண்டு தக்காளி, பெருங்காயம், உப்பு, புளி சேர்த்து நீர் விடாமல் அரைக்கவும்.

கடாயில் எண்ணெயைக் காயவைத்து கடுகு, உளுந்து தாளித்து கருவேப்பிலை போட்டு மொறுமொறுப்பாக ஆகும் வரை வதக்கி சட்னியில் கொட்டிக் கலந்து உபயோகிக்கவும்.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்17 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:35
    பிரிண்ட் எடுத்தே வீட்டில் கொடுத்து விட்டேன்... நன்றி...

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam17 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 8:44
    ஏழு வித சட்னிகளைத் தொட்டுக் கொள்ளகுறைந்தது ஏழுஇட்லியாவது சாப்பிட வேண்டாமா.

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu18 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 7:35
    ஸ்ஸ்ஸ்ஸ்பா....பெயர்கள் வித்தியாசமாக இருக்கின்றது. ஆனால் செய்யும் பொருட்கள் அதே. பெயரில்லாமல் கூட...செய்வதுண்டு...ஹஹ்

    கீதா: சகோதரி டாங்கர் சட்னி செய்வதுண்டு என்றாலும் பெயர் வித்தியாசமாக இருக்கின்றது. என் மாமியார் டாங்கர் பச்சடி என்று செய்வதுண்டு. உளுத்தம்பருப்பை ஒரு குழிகரண்டி என்று வைத்துக் கொள்ளுங்கள்....நன்றாக சிவக்க வறுத்துக் கொண்டு பச்சைமிளகாய் வைத்து மையாக அரைத்துக் கொண்டு உப்பு போட்டு தயிரில் கலந்து, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளிப்பார்கள். தேங்காய் வேண்டுமென்றால் கொஞ்சம் சேர்த்துக் கொள்ளலாம்...

    அனைத்தையும் குறித்துவைத்துக் கொண்டோம்.....

    பதிலளிநீக்கு

    குட்டன்ஜி18 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 12:36
    ஒரு சட்னிக்கே வழியக்காணோம்! ஏழு விதமா?என்னத்தை செஞ்சு என்னத்த சாப்பிட்டு!

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்19 ஆகஸ்ட், 2015 ’அன்று’ முற்பகல் 8:10
    ஏழு வித சட்னி! தினம் ஒன்று தான் நமக்கு சுலபம்! :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:37
    செய்து பார்த்தாங்களா டிடி சகோ

    ஹாஹா பாலா சார். முடிந்தால் சாப்பிடலாம். அல்லது மினி இட்லியாக செய்து கொள்ளலாம். :)

    கீத்ஸ் & துளசி சகோ பெயர் வைப்பதில் நாங்க கில்லாடிகளாக்கும். :) ஒரு சில சட்னிகளை அதே மூலப் பொருட்களோடு வெவ்வேறு விதங்களில் வெவ்வேறு பெயர்களில் செய்வோமாக்கும். :)

    ஏன் குட்டன் இப்பிடி அலுத்துக்குறீங்க :)

    ஆம் சகோ. இது பத்ரிக்கைக்காக எழுதியது. ஆனால் நான் முக்கால்வாசிநாள் இரண்டு வைத்துவிடுவேன்.


    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 ஆகஸ்ட், 2015 ’அன்று’ பிற்பகல் 7:37
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...