திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.
பார்க் கல்லூரியின் மகளிர் மன்ற துவக்கவிழாவுக்காக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தபோது பெங்களூரில் இருந்து போக்கு வரத்துச் ( ட்ரெயின் டிக்கெட் ) செலவு, தங்க இடம் ஏற்பாடு செய்திருந்தார்கள். டிக்கெட் ஆன்லைனில் புக் செய்யப்பட்டு கைபேசியில் மெசேஜ் வந்துவிட்டது.
முகநூலில் நண்பரான திரு திருமாறன் ஜெயராமன் சார் என்னை அவர்கள் கல்லூரியில் பெண்கள் மன்றத்தைத் துவக்கி வைத்து இருபது நிமிடம் உரையாற்ற அழைத்திருந்தார். ( 20 நிமிடம் பேசி முடித்ததும் ’இன்னும் கொஞ்சம் பேசி இருக்கலாம் நீங்க. நல்லா இருந்தது’ என்றார் ! )
முதல்வர் திரு திருமாறன் ஜெயராமன் அவர்கள் ஏற்பாட்டின்படி தொலைபேசியில் கல்லூரியின் பெண்கள் மன்றம் சார்பாக ஒரு பேராசிரியை பேசினார் ( மல்லிகா என்று நினைவு ). ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி விநாயகா என்ற ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அதிகாலை என்பதால் தான் ரிசீவ் செய்ய வர இயலவில்லை எனவும் மன்னிப்புக் கேட்டு கல்லூரிப் பெயரை ஹோட்டல் ரிஸப்ஷனில் சொன்னால் ரூம் தருவார்கள் என்றார்.