இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.
தலைவாழை இலையில் சாப்பாடு உண்பது நம் தமிழருக்கே உள்ள பழக்கம். இதனால் நிறைய ஹெல்த் பெனிஃபிட் இருக்கு என்பதை கூகுளில் தேடினால் கண்டடையலாம்.தஞ்சாவூர் தாட்டிலையில் செட்டிநாட்டு விருந்து என்று எங்கேயோ ஒரு கவிதை கூடப் படிச்சேன். அதெல்லாம் அந்தக் காலம் . இப்ப நார்மல் இலைதான். விருந்தின் சுவையும் அளவும் இலையின் பரிமாணமும் இடத்துக்கு இடம் மாறுபடும்.
கம்ப்யூட்டர் இலை என்று சொல்லி பேப்பர் இலையிலெல்லாம் சாப்பாடு போடுறாங்க. கோராமை. மரத்துலேருந்து அப்பத்தான் வெட்டினமாதிரி இளம் இலையில் சாப்பிடுவது இனிமை. ஒவ்வொருக்கா கிழிஞ்சு போன சருகான சுத்தமில்லாத இலை எல்லாம் வந்து சேரும். ஹ்ம்ம் கஷ்டகாலம்
அக்கம்பக்கத்துக்காரங்களுக்கும் நல்ல இலையா இருக்கணும்னு உக்கார முன்னாடி வேண்டிக்கணும் இல்லாட்டி இலையைப் புடிச்சுக் கழுவுறேன்னு சிலர் பக்கத்துல உக்கார்ந்து தண்ணிய நம்ம ஆயிரக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள பட்டு சேலை மேல தாட்சண்யமில்லாம கொட்டிருவாங்க. அப்புறம் இலையில் ஊத்துற சாம்பார், தண்ணிக் குழம்பு, பாயாசமெல்லாம் வழிஞ்சு வந்து மடியில் சிந்திராம சாப்பிடுறதும் தமிழனுக்கே கை வந்த ஒரு கலை. இதெல்லாம் இல்லாம பொறுமையா அழகா பரிமாறுவதும் மிகச் சிறந்த கலைதான்.
பட்டுச்சேலை வைரக் காப்பு மோதிரம் எல்லாம் பத்திரமா வைச்சுக்கிட்டுக் கண்காணிப்போட எதிலும் உரசாம பட்டும் படாம உக்கார்ந்து சாப்பிடணும் இல்லாட்டி வைரக் கல்லுல அல்வா, பாயாசம் புலவுல இருக்குற நெய் எண்ணெய் எல்லாம் புகுந்து எண்ணெய்க் கல்லா மாறிடும். புடவை நாலுதரம் ட்ரை க்ளீனிங்க் போயிட்டு வந்தா எங்காவது அவசரமா கிளம்ப உடுத்தினா டர்ன்னு சீக்கிரம் கிழிஞ்சுடும். முப்பத்தஞ்சாயிரம் போச்சேன்னு கன்னத்துல கைவைக்க வேண்டியதுதான் ( ஆமா இன்னும் புடவை விலைக்கெல்லாம் அரசு ஏதும் அளவு விதிக்கலைல்ல.. சும்மா டவுட்டு அதான் கேட்டுக்கிட்டேன். :) எதுனாச்சும் டாக்ஸ் போட்டுறப் போறாங்க. நமக்கு சம்பளம் எல்லாமே டாக்ஸ் புடிஞ்சபின்னாடிதானே வருது. ) அப்புறம் ஒரு முக்கிய விஷயம். நகைநட்டெல்லாம் அம்மா அப்பா கொடுத்த பரம்பரைச் சொத்துத்தானுங்கோ. 😝😝 பத்ரமா போயிட்டு பத்ரமா வீடுவந்து எல்லாத்தையும் லாக்கர்ல சேக்குறதுக்குள்ள எல்லா ஃபங்க்ஷனும் ஒரே மாசத்துல வந்துறாதான்னு தோணும் :)
சைவ, அசைவ விருந்து, ஹோட்டல் சாப்பாடு என்று கலந்துகட்டி சாப்பிட்டதெல்லாம் இங்கே ஃபோட்டோ பிடிச்சு போட்டிருக்கேன். சம்பந்தப்பட்டவங்க பார்த்து கூட தெரிஞ்சிக்கலாம். :)
எடுத்தோடனே அசைவமான்னு ஓட வேண்டாம். இது ஒரு சொந்தக்காரப்புள்ள பெரிய மனுஷி ஆனபோது அவங்க போட்ட விருந்து.நடக்குறது நீஞ்சுறது ஓடுறது ஓடுறது போடுறது என்று விவேக் பாணியில் எல்லாமே இருக்கு. :)😂