எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 16 ஜனவரி, 2021

இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.

இலை விருந்து. இதுதாண்டா சாப்பாடு.


தலைவாழை இலையில் சாப்பாடு உண்பது நம் தமிழருக்கே உள்ள பழக்கம். இதனால் நிறைய ஹெல்த் பெனிஃபிட் இருக்கு என்பதை கூகுளில் தேடினால் கண்டடையலாம்.தஞ்சாவூர் தாட்டிலையில் செட்டிநாட்டு விருந்து என்று எங்கேயோ ஒரு கவிதை கூடப் படிச்சேன். அதெல்லாம் அந்தக் காலம் . இப்ப நார்மல் இலைதான். விருந்தின் சுவையும் அளவும் இலையின் பரிமாணமும் இடத்துக்கு இடம் மாறுபடும்.

கம்ப்யூட்டர் இலை என்று சொல்லி பேப்பர் இலையிலெல்லாம் சாப்பாடு போடுறாங்க. கோராமை. மரத்துலேருந்து அப்பத்தான் வெட்டினமாதிரி இளம் இலையில் சாப்பிடுவது இனிமை. ஒவ்வொருக்கா கிழிஞ்சு போன சருகான சுத்தமில்லாத இலை எல்லாம் வந்து சேரும். ஹ்ம்ம் கஷ்டகாலம்

அக்கம்பக்கத்துக்காரங்களுக்கும் நல்ல இலையா இருக்கணும்னு உக்கார முன்னாடி வேண்டிக்கணும் இல்லாட்டி இலையைப் புடிச்சுக் கழுவுறேன்னு சிலர் பக்கத்துல உக்கார்ந்து தண்ணிய நம்ம ஆயிரக்கணக்கான ரூபாய் பெறுமானமுள்ள பட்டு சேலை மேல தாட்சண்யமில்லாம கொட்டிருவாங்க. அப்புறம் இலையில் ஊத்துற சாம்பார், தண்ணிக் குழம்பு, பாயாசமெல்லாம் வழிஞ்சு வந்து மடியில் சிந்திராம சாப்பிடுறதும் தமிழனுக்கே கை வந்த ஒரு கலை. இதெல்லாம் இல்லாம பொறுமையா அழகா பரிமாறுவதும் மிகச் சிறந்த கலைதான்.

பட்டுச்சேலை வைரக் காப்பு மோதிரம் எல்லாம் பத்திரமா வைச்சுக்கிட்டுக் கண்காணிப்போட எதிலும் உரசாம பட்டும் படாம உக்கார்ந்து சாப்பிடணும் இல்லாட்டி வைரக் கல்லுல அல்வா, பாயாசம் புலவுல இருக்குற நெய் எண்ணெய் எல்லாம் புகுந்து எண்ணெய்க் கல்லா மாறிடும். புடவை நாலுதரம் ட்ரை க்ளீனிங்க் போயிட்டு வந்தா எங்காவது அவசரமா கிளம்ப உடுத்தினா டர்ன்னு சீக்கிரம் கிழிஞ்சுடும். முப்பத்தஞ்சாயிரம் போச்சேன்னு கன்னத்துல கைவைக்க வேண்டியதுதான் ( ஆமா இன்னும் புடவை விலைக்கெல்லாம் அரசு ஏதும் அளவு விதிக்கலைல்ல.. சும்மா டவுட்டு அதான் கேட்டுக்கிட்டேன். :) எதுனாச்சும் டாக்ஸ் போட்டுறப் போறாங்க. நமக்கு சம்பளம் எல்லாமே டாக்ஸ் புடிஞ்சபின்னாடிதானே வருது. )  அப்புறம் ஒரு முக்கிய விஷயம். நகைநட்டெல்லாம் அம்மா அப்பா கொடுத்த பரம்பரைச் சொத்துத்தானுங்கோ. 😝😝 பத்ரமா போயிட்டு பத்ரமா வீடுவந்து எல்லாத்தையும் லாக்கர்ல சேக்குறதுக்குள்ள எல்லா ஃபங்க்‌ஷனும் ஒரே மாசத்துல வந்துறாதான்னு தோணும் :)

சைவ, அசைவ விருந்து, ஹோட்டல் சாப்பாடு என்று கலந்துகட்டி சாப்பிட்டதெல்லாம் இங்கே ஃபோட்டோ பிடிச்சு போட்டிருக்கேன். சம்பந்தப்பட்டவங்க பார்த்து கூட தெரிஞ்சிக்கலாம். :)
எடுத்தோடனே அசைவமான்னு ஓட வேண்டாம். இது ஒரு சொந்தக்காரப்புள்ள பெரிய மனுஷி ஆனபோது அவங்க போட்ட விருந்து.நடக்குறது நீஞ்சுறது ஓடுறது ஓடுறது போடுறது என்று விவேக் பாணியில் எல்லாமே இருக்கு. :)😂
இது ஒரு திருமணத்தில் முதல் நாள் இரவுப் பலகாரம். இட்லி, கெட்டிக் குழம்பு, இனிப்புச் சீயம், சிவப்பரிசிப்பணியாரம், மிளகாய்ச்சட்னி, கப்பில் பால் கொழுக்கட்டை, சப்பாத்தி காளான் குருமா, தயிர்சாதம், பூண்டுக்குழம்பு.


இது சோழபுரம் ஹெரிட்டேஜ் டூரில் மதிய உணவு. காய்கறிப் புலவு, வெங்காயத் தயிர்ப்பச்சடி, அப்பளம், சாதம், கத்திரிக்காய் கெட்டிக் குழம்பு, சௌ சௌ கூட்டு, குட்டி உருளை மசாலை, சிக்கன் சிக்ஸ்டிஃபைவ், மட்டன் சுக்கா
இது ஒரு திருமணத்தில் காலை உணவு. இட்லி சாம்பார், பொங்கல், வடை, பணியாரம் , அல்வா, அவியல், வெஜ் ஊத்தப்பம்.
இது அதே திருமணத்தில் மதிய உணவு. புலவு, மல்லி சாதம், பூந்தி, பலாச்சுளை, உப்பு, ஊறுகாய், உருளை சிப்ஸ், காலிஃப்ளவர் ஃப்ரை, இங்கிலீஷ் காய்கறிப் பிரட்டல், கொண்டக்கடலை மண்டி, பாலாடைக்கட்டி பட்டாணிப் பொரியல், சௌசௌ கடலைப்பருப்புக் கூட்டு.
இது காரைக்குடி ஜெய்னிகாவில் கீ ரோஸ்ட். செம டேஸ்ட்.
தர்மபுரி ஹோட்டல் அதியமான்ல ரூம் சரவீஸுக்கு தோசையை எல்லாம் கவர் போட்டுத் தராங்க. ஜெயண்ட் சைஸ் தோசை. :)
ஆயிரம் இருந்தும் ரத்னா கஃபே மாதிரி வருமா. :)
அங்கேயே பூரி.
இது எங்கேன்னு ஞாபகமில்ல. பட் ஃபைன் ரோஸ்ட்.
அவினாசியிலிருந்து கோவை வரும் வழியில் உள்ள சரவணபவன் குழாய்ப் புட்டு. லேயர் லேயரா தேங்காய் போட்டு இரண்டு கலர்ல - பச்சரிசி மாவு & சிவப்பரிசி மாவுப் புட்டு கடலைக் குழம்போட சூப்பரா இருந்தது.
ஹொகனேக்கல்ல மதிய சாப்பாடு. மீன் விருந்து. இது விரால் மீன். இருந்தும் எனக்கு கடல்மீன் தான் பிடிக்குது. அதுவும் வஞ்சிரம் மட்டும்.
இன்னொரு திருமண காலை விருந்து. அதே இட்லி சாம்பார், பொங்கல், அவியல், வடை, பணியாரம், டாங்கர் சட்னி, கவுனரிசி, அல்வா,வெஜ் ஊத்தப்பம்.
இது திருமண அல்லது திருவாசக முற்றோதல் சாப்பாடுன்னு நினைக்கிறேன்.  அதே செட்டிநாட்டு மெனு. கருணை மசியல் & கட்லெட் எக்ஸ்ட்ராவா இருக்கு.
ஏதோ விளையாட்டுப் பொட்டி வேவுன்னு நினைக்கிறேன். எடவேளைப் பலகாரம் ( மாலைப் பலகாரம் ). பால் பணியாரம் கப்பில், தம்புருட்டு அல்வா, சிவப்பரிசிப் பணியாரம்,கதம்பச்சட்னி, இடியாப்பம், குருமா, இட்லி, சாம்பார், ரவா ரோஸ்ட், மசாலைச் சீயம்/போண்டா, தேங்காய்ச்சட்னி.
இது பார்க் காலேஜுக்கு சிறப்பு விருந்தினராப் போயிருந்தப்ப அந்தக்  கல்லூரி முதல்வர் திருமாறன் ஜெயராமன் அளித்த மதிய விருந்து. ஹோட்டல் பேரு மறந்துருச்சு.
படைப்புச் சாப்பாடு. அக்கினி ஆத்தா வீடு.
அதே படைப்புவீட்டில் மக்யாநாள் சாப்பாடு மரக்கறிக்காய் தோசையுடன்
இன்னொரு திருமணம். இன்னொரு காலைப் பலகாரம். பொடித்தோசை , இனிப்பு சீயம் எக்ஸ்ட்ரா.
இன்னொரு இரவுப் பலகாரம். பெண்ணழைச்ச வீடு. பாதிதான் எடுத்திருக்கு. மிச்ச ஐட்டம் அப்புறம் வந்தது. இட்லி குருமா, பூரி, பெசரட். மாங்கா ஊறுகாய் அண்ட் சோ ஆன்.
மெகாசைஸ் இலையில் தமிழ்கடவுள் தண்டாயுதபாணி  பூசைச் சாப்பாடு. படையல். இதுதாண்டா சாப்பாடு. இவந்தாண்டா தமிழன்.பருப்பு நெய் , வெண்டைக்காய் மொச்சை மண்டி, வாழைக்காய்ப் பொடிமாஸ், கருணைக்கிழங்கு மசியல், பரங்கிக்காய் புளிக்கறி,முட்டைக்கோஸ் துவட்டல், குடமிளகாய்ப் பச்சடி, பலாக்காய் மசாலா,  பூசணிக்காய் சாம்பார், லட்டு, அப்பளம், வடை, பாயாசம்.

மலையாளத்தாரில் ஒரு சொல்வழக்கு உண்டு. சத்யான்னம் என்பார்கள்.குருவாயூரப்பன் சன்னதியில் சோறு உண்டு அவன் அருள் கிடைத்தவர்களுக்குத்தான் அது கொடுத்து வைத்திருக்குமாம். அதுபோல உண்டு மகிழுங்கள். வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடுங்கள். நோயற்ற வாழ்க்கையைக் கொண்டாடுங்கள்.   :)

1 கருத்து:

  1. கரந்தை ஜெயக்குமார்3 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 5:34
    ஆகா
    ஒரு விருந்தே வைத்துவிட்டீர்கள்

    பதிலளிநீக்கு

    ஸ்ரீராம்.3 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 6:31
    பசியைக் கிளப்பி விடுகிறீர்கள். வித்தியாசமான, நல்ல கலெக்ஷன். சமீபத்தில் ஒரு நண்பர் வீட்டு விருந்துக்குச் சென்றிருந்தோம். நல்ல பெரிய பெரிய வாழை இலைகளை எல்லோருக்கும் வைத்தார்கள். பாதி இலை இருந்தாலே போதும். ஆனால் கட் செய்யாமல் பெரிய இலையாகவே எல்லோருக்கும் வைத்து, அதன் நடுவே சிறு கரண்டி பொங்கல், இரண்டு சிறு இட்லிகள், ஒரு ஸ்பூன் ஸ்வீட் வைத்தார்கள். இரண்டாம் முறை கேட்டால் ரொம்பத் தயங்கி விட்டுப் பரிமாறினார்கள். சிறிய இலையாக இருந்திருந்தால் அவ்வளவு குறையாகத் தெரிந்திருக்காது!

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்3 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:02
    ஆத்தாடி...! முடியலே... பசிக்குது...!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan3 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:31
    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி ஸ்ரீராம். ஹ்ம்ம் சிலர் அப்படித்தான்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan3 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 8:31
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்3 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 10:19
    தலைவாழை இலை போட்டு சாப்பாடு! நடத்துங்க....

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 டிசம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 12:17
    டி டி சகோ

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு

    சாந்தி மாரியப்பன்29 ஜனவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 5:34
    எங்களை விட்டுட்டு நீங்க மட்டும் தனியா வாழையிலையில் சாப்பிட்டுட்டு வந்திருக்கீங்க. இதெல்லாம் ஆவறதில்லை..

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...