எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 21 ஜனவரி, 2021

பான், பானி, பனீர், மற்றும் சதி. குவாலியர் கோட்டையில் சில கணங்கள். பாகம் 3 புதிய பயணியில்.

குவாலியர் கோட்டையில். பாகம் 3 புதிய பயணியில்.



கோட்டைக் கதவிலும் கல் சாளரங்கள்

 

 










 

சீக்கிய குருத்துவாராவும், சாஸ்பஹூ கோயிலும் பார்க்க வேண்டியவை. (சாஸ் பகூ என்றால் ஹிந்தியில் மாமியார் மருமகள். – ஆனால் சாஸ்த்ர பஹூ என்ற விஷ்ணுவின் கோயில் என்றும் சொல்கிறார்கள்) இக்கோயிலில் சரஸ்வதி, விஷ்ணு, பிரம்மா சிலைகள் செதுக்கப்பட்டிருக்கு. கச்வாஹா வம்சத்தைச் சேர்ந்த அரசன் மகிபாலனால் இக்கோட்டை 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கு.

  இக்கோயிலும் கோட்டையும் ரெட் சாண்ட் ஸ்டோன் எனப்படும் செம்மணல் கற்களால் ஆனது. குவாலியர் கோட்டையில் குரு ஹர்கோபிந்த் சிங் பேரரசர் ஜஹாங்கீரார் சிறை வைக்கப்பட்டிருந்தாராம். அதன் பின் இங்கே ஒரு குருத்துவாரா நிறுவப்பட்டதாகச் சொல்றாங்க. ஜைனர்களின் தீர்த்தங்கரர் சிலைகளும் , அவர்கள் செதுக்கிய பிரமாண்ட கல்வெட்டுகளும் இருக்கின்றன.

  சீன ட்ராகன் உருவங்கள் ( கையால் வடிவமைக்கப்பட்டவை ) மத்திய கால இந்தியக் கட்டிடக் கலைக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றன. கோட்டையைப் பார்க்கும்போதே எத்தனை மனிதர்களின் உழைப்பு, எத்தனை நூற்றாண்டுகள் கடந்து வந்திருக்கின்றது என்று புரியும். ஆக்ரா கோட்டைக்குச் செல்லும் நுழைவாயிலும் மற்றொருபுரம் இருக்கிறது. அண்டர்க்ரவுண்டில் இருக்கும் பல்வேறு சுரங்கப் பாதைகளும் அமைக்கப்பட்டிருக்கிறது.

  இரண்டாவது தோமர் அரசரான 1480 – 1486 இல் கீர்த்தி சிங் ( கரண் சிங் ) கட்டிய கரண் மஹால் இந்திய கட்டிடக் கலையம்சம் கொண்டு கட்டப்பட்டது. செவ்வக வடிவக் கட்டிடமான இது இரண்டு மாடிகளைக் கொண்டது. இதன் நடுவில் அரசவை மண்டபம் இருந்திருக்கிறது. இந்த மஹாலில் துருக்கியர்களின் நீராடும் இடமான ஹமாம் என்ற மண்டபமும் அமைக்கப்பட்டிருந்திருக்கிறது.

  அக்பரின் அவையை அலங்கரித்த நவரத்னமான இசைக்கலைஞர் தான்சேன்,முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் மட்டுமல்ல, உஸ்தாத் அம்ஜத் அலி கானும் பிறந்த ஊர் இதுதான். வருடந்தோறும் பல்வேறு இசைக்கலைஞர்களும் கூடி நடத்தும் தான்சேன் சங்கீத் சம்ரோஹ் மற்றும் கஜல் நிகழ்ச்சி குவாலியர் காரனா என்ற இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த ஊர் திருமணங்களிலும் பிரசித்தி பெற்ற ஆஹிரி, லாங்கி,துல்துல் கோரி போன்ற நடனங்கள் ஆடப்படுகின்றன.

  1508 இல் தோமர் வம்சத்து ராஜா மான்சிங் கட்டிய இக்கோட்டை 16 ஆம் நூற்றாண்டில் முகலாயர்கள் கைப்பற்றியவுடன் அரசாங்கக் கைதிகளை அடைத்து வைக்கும் இடமாகவும் திகழ்ந்திருக்கிறது.கூண்டுகள் கொண்ட நிறைய அறைகள் தென்படுகின்றன.  இரண்டு பீரங்கிகள் ஓரிடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு சிறிய பீரங்கியும் கர்ண மஹாலுக்குப் போகும்வழியில் வைக்கப்பட்டுள்ளது.

  இக்கோட்டையினுள் மனிதர்கள், மான்கள், யானைகள் , சிங்கங்கள், வாத்துகள், வாழைமரங்கள், மயில்கள், ஆகிய உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன, இதில் என்ன சிறப்புன்னா வர்ணங்கள் அடிக்கப்படாமல் வர்ணக் கற்களை வெட்டி ஒட்டி அழகு படுத்தப் பட்டுள்ளது. நூற்றாண்டுகள் தாண்டியும் இந்த வண்ணங்கள் நிலைத்து நிற்குது.இதை ஜெயின் ராக் கட் கல்சர்னு சொல்றாங்க.

  இக்கோட்டையினுள்ளே இரண்டு திறந்த முற்றங்கள் கொண்ட இரண்டு அரசவை வளாகங்களும் இருக்கின்றன . மிக அழகாக வடிவமைக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள் இதைத் தாங்கி இருக்கின்றன. மிக அழகான ஓவியங்களும் வண்ணக் கண்ணாடிகளும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. மலையின் சிகரப் பகுதியில் பூமியை விட 300 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது இக்கோட்டை.

  ஜூலா கர், கேசர் குண்டா, பான் சிங்கார் ஆகிய அடுத்த அடுத்த தளங்களில் அமைந்துள்ளன. அடுத்த தளத்தில் கூடங்களும் அதன் அடுத்த தளத்தில் சமையல் கூடமும் இருந்ததா சொல்றாங்க. சில படிகள் ஒரு ஆள் மட்டுமே நடக்கக் கூடியதா இருக்கு. பல படிகள் இறங்கினா கொஞ்சம் வவ்வால் வாடையோடு மூச்சு முட்டும் வட்டவடிவிலான மிகப் பெரும் தூண்கள் செதுக்கப்பட்ட கூடம் இருக்கின்றது.

  ராணிகள் வாழ்ந்த அந்தப் புரங்கள், இறைவணக்கத்துக்காக அமைக்கப்பட்ட 700- 800 நூற்றாண்டு பழமையான கோட்டீஸ்வர் டெம்பிள் எனப்படும் ( சிவலிங்கம் , சக்தி அமைக்கப்பட்ட ) சிவன் கோவில் , புராணக் குளம், ஜௌஹார் குண்ட், அறுகோண வடிவில் அமைக்கப்பட்ட கரன் மஹால் போக இன்னும் பல மாளிகைகள் இருக்கின்றன. பார்க்க ஒரு நாள் போதாது. கட்டுவதற்கு எத்தனை நாட்கள் தேவைப்பட்டனவோ. மேலும் அங்கே அவ்வப்போது பழுதானவற்றைச் செப்பனிடும் வேலையும் நிகழ்ந்து வருகின்றது. சில மக்கள் அங்கே இருக்கும் திறந்தவெளி மஹாலின் ஹாலிலேயே தங்கி சமைத்துச் சாப்பிட்டு பணிசெய்து வருகிறார்கள்.

  இயற்கை முறையில் வடிவமைக்கப்பட்ட பலகணிகள் ,கற்சாரளங்கள் அலங்கரிக்கின்றன. கற்களையும் பாறைகளையும் குடைந்து வெட்டி சாளரங்களையும் உப்பரிகைகளையும் அமைத்துள்ளார்கள்  பார்க்கும்போதே ராணிகளும், ராஜாக்களும் நிலவொளியில் அமர்ந்திருப்பது போல் உள்ளது. தினமும் இரவில் இந்நகரைப் பற்றிய லைட் ஷோ இக்கோடை முகப்பில் ( ஆங்கிலம் & ஹிந்தியில் ) நடைபெறுகிறதாம்.

  நகருக்குள் ஷிர்டி சாய்பாபா கோயிலும் மொராரில் விவஸ்வான் மந்திரும் அமைந்திருக்கிறது. இங்கே ஒரிஸ்ஸா, புவனேஷ்வரில் உள்ளது போல சூரியனுக்குக் கோவில் எழுப்பி உள்ளார்கள். மிகப் ப்ரகாசமான கோயில் மிகப் பெரும் தோட்டத்தோடு அமைந்துள்ளது. குயில்களும் ,மயில்களும் அணில்களும் ஆடிக் களிக்கின்றன. சூரியகாந்திப் பூக்கள் மலர்ந்து சிரிக்கின்றன. மணிப்புறாக்களும் மாடப் புறாக்களும் பறந்து களிக்கின்றன. அழகிய பூங்கா அமைந்துள்ளது, விவஸ்வான் மந்திரும் ரெட் சாண்ட் ஸ்டோனால் கட்டப்பட்டுள்ளது. உள்ளூர்க்காரர்கள் அநேகர் இங்கே காலையில் உடற்பயிற்சி , யோகா தியானம்  சூரிய நமஸ்காரம் செய்கின்றார்கள். பேரமைதியும் சாந்தமும் நிலவும் இடம் இது.

  பான் கடைகள், பானி பூரி, பனீர் மசாலா , பால் பொருட்களாலான உணவுகள் இனிப்புகள் இங்கே ப்ரசித்தம். நம்மூரு மசால் தோசையை மக்கள் விரும்பி உண்கின்றார்கள். ஐ சி எஃப் பில் மசாலா தோசை விற்றுக்கொண்டே இருக்கிறது. சாம்பார்தான் புளி ரசம் போல இருக்கு. அதையும் குடிக்கின்றார்கள் மக்கள். நெற்றியிலும் வகிட்டிலும் குங்குமமிட்ட முக்காடு அணிந்த பெண்களும் , தலைப்பாகை அணிந்த சில ஆண்களையும் காண முடியும் இங்கு.

  ரயில்வே ஸ்டேஷன் , ஏர்போர்ட் இருக்கிறது. ஹோட்டலில் தங்கியதால் தங்குமிடங்கள் பற்றித் தெரியவில்லை. ஆயிரம் ரூபாயில் ரூம்கள் கிடைக்கும். அரசு தங்குமிடங்கள் இருந்தால் குறைவான வாடகைக்குக் கிடைக்கலாம். கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு வரலாற்று பூர்வமான இடம் இது.

 
கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு வரலாற்று பூர்வமான இடம் இது. 

1 கருத்து:

  1. வை.கோபாலகிருஷ்ணன்13 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 3:00
    அழகான பிரும்மாண்டமான படங்களுடன் அற்புதமான செய்திகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்14 ஏப்ரல், 2015 ’அன்று’ முற்பகல் 7:17
    அருமையான படங்கள்...

    ரசம் எப்படி இருக்குமோ...? ஹிஹி...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan14 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 8:52
    நன்றி கோபால் சார்

    நன்றி தனபாலன் சகோ. :)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan14 ஏப்ரல், 2015 ’அன்று’ பிற்பகல் 8:52
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)

    பதிலளிநீக்கு

58 ஆவது தேசிய திரைப்பட விழாவில் விருதுக்கு வாழ்த்துக்கள் ஜீவாவுக்கும்., திரிசக்திக்கும்.

 58 ஆவது தேசிய திரைப்பட விழாவில் விருதுக்கு வாழ்த்துக்கள் ஜீவாவுக்கும்., திரிசக்திக்கும். நண்பர் ஜீவாவின் ஓவியங்கள் அற்புதமானவை.. அவர் எழுதி...